கேரள வெள்ள நிவாரணத்துக்காக திருப்பூரை சேர்ந்த திருநங்கைகள் 50 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி மாவட்ட மையத்தில் வழங்கினர்.
இடைவிடாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்திற்கும் அதிகமானோர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். எனவே கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த பணத்தையோ, உணவுப் பொருட்களையோ வழங்கி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று 50 லட்சம்ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் 60 திருநங்கைகள் ஒன்றிணைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அத்தியாவசிய உணவு பொருட்கள், உடைகள் மற்றும் மருந்து பொருட்களை வாங்கியுள்ளனர். அவற்றை மாவட்ட வெள்ள நிவாரணம் சேகரிக்கும் மையத்தில் சமூகநலத்துறை அலுவலரிடம் வழங்கினர். இது கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.