இந்தியா

கொரோனா பரவல் எதிரொலி: திருப்பதியில் மலைக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

webteam

கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறந்திருக்கும். எனவே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் இருக்கும் அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்கள் சந்தித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, திருப்பதியில் 10 இடங்களில் 100 கவுண்டர்கள் அமைத்து ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டிகளின் முறைப்படி திருப்பதி வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தரிசனம் டிக்கெட்டுகள் வாங்கிய பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். டிக்கெட் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க இயலாது எனவும் அவர் தெரிவித்தார்.