சூரிய கிரகணம் காரணமாக நாளை திருப்பதி ஏழுமலையான் கோயில் நாள் முழுவதும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. இதன் காரணமாக இன்று இரவு 8 மணிக்குத் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படுகிறது. அதன் பின்னர் 18 மணி நேரம் கழித்து, நாளை பிற்பகல் 2.30 மணிக்குக் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நடை திறக்கப்பட்டதும் கிரகண சடங்குகளைக் கடைப்பிடித்த பிறகு, சுப்ரபதம், தோமலா, கொலுவு மற்றும் பஞ்சங்க ஸ்ரவனம் போன்ற கட்டாய சடங்குகள் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
சூரிய கிரகணம் நாளை காலை 9:15 மணிக்குத் தொடங்கி மாலை 3:04 மணி வரை தொடரும் எனவும் அதிகபட்ச கிரகணம் நண்பகல் 12:10 மணிக்கு நிகழும் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிரகணமானது ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்தியப் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.