இந்தியா

பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து... பிரியும் இந்தியாவின் டாப் 'ஐ.ஏ.எஸ் இணையர்'!

JustinDurai

இந்தியாவின் பிரபல ஐ.ஏ.எஸ் இணையரான டினா டாபி - ஆதார் அமீர்கான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

2016 ஐ.ஏ.எஸ் பேட்ஜை சேர்ந்தவர்கள் டினா டாபி, ஆதார் அமீர்கான் இருவரும். 2015 சிவில் சர்வீஸ் தேர்வில், டினா டாபி முதலிடம் பிடித்தவர். ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்டது டினா டாபியின் குடும்பம். டினா போபாலில் பிறந்தார். இவரைப் போலவே ஆதார் அமீர்கான் 2015 சிவில் சர்வீஸ் தேர்வில் 2-ம் இடம் பிடித்தவர். காஷ்மீரை பூர்விகமாக கொண்டவர் ஆதார் அமீர்கான்.

இவர்களுடையது சுவாரஸ்யமான காதல் பின்னணியைக் கொண்டது. யு.பி.எஸ்.சியில் தேர்வில் வென்ற பிறகு, இருவரும் முசோரியில் பயிற்சி பெற்றனர். அப்போது இருவரும் நெருங்கி பழகி, காதலாக மாற 2018-ல் திருமணம் செய்துகொண்டனர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ஆதார் அமீர்கானும், புத்த மத்தைச் சேர்ந்த டினா டாபியும் ஒன்று சேர்ந்தனர். 2018ல் இந்த ஐ.ஏ.எஸ் தம்பதியரின் திருமணத்துக்கு பல்வேறு தலைவர்கள் நேரில் வாழ்த்தினர்.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அப்போதைய மக்களவைத் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில், இந்து மகா சபை இவர்களது திருமணத்தை 'லவ் ஜிஹாத்' என விமர்சனம் செய்தது.

வாழ்த்துக்களும், விமர்சனங்களும் ஒருசேர இருவரும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர். எனினும் இந்தியாவின் `ஸ்டார் ஜோடியாக' வலம்வந்தனர்.

ஆனால், இவர்கள் குடும்ப வாழ்க்கை இரண்டு வருடம் மட்டுமே நீடித்துள்ளது. ஆம், இருவரும் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். திருமணத்துக்கு பின் இருவரும் ராஜஸ்தான் கேடரில் ஜெய்ப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் தனது பெயரிலிருந்து 'கான்'-ஐ நீக்கினார் டினா டாபி. எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டினா டாபியின் இந்தச் செயல் அப்போதே அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்தது.

அதேபோல், இன்ஸ்டாகிராமில் ஆதார் அமீர்கானும் டினாவை அன்பாலோ செய்தார். இதை வைத்து அவர்களுக்கு எதோ நடக்கிறது என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், தற்போது விவாகரத்து வரை விவகாரம் சென்றிருக்கிறது.