செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
ஆலியா பட், நயன்தாரா, சமந்தா, சாய் பல்லவி எனத் தொடங்கி, இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத், பாடகர் அறிவு எனப் பலரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. முதன்முறையாக TIME வெளியிட்டுள்ள TIME100 Next India பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து பார்க்கலாம்!
உலகப் புகழ்பெற்ற TIME இதழ், இந்தியாவின் பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் திறமையாளர்களையும் எதிர்காலத் தலைவர்களையும் அங்கீகரிக்கும் வகையில், முதன்முறையாக TIME100 Next India பட்டியலை வெளியிட்டுள்ளது. பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், வணிகம், விளையாட்டு, அறிவியல், சுகாதாரம் மற்றும் சமூகச் செயல்பாடு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
TIME இதழின் ஆசிரியர் சாம் ஜேக்கப்ஸ், எதிர்காலத்தை வடிவமைக்கும் வளர்ந்து வரும் தலைவர்களை அடையாளம் காண்பதே TIME100 Next பட்டியலின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, முதன்முறையாகப் பிராந்திய அளவில் TIME100 Next India பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இளம் தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை மட்டுமின்றி, உலகின் எதிர்காலத்தையும் வடிவமைக்கப் போகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியல், சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்களை மட்டுமின்றி, தங்கள் சமூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வருபவர்களையும் அங்கீகரிக்கிறது. கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தியவர்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.எஸ். ராஜமௌலி, விஷால் பரத்வாஜ் மற்றும் ரோஹிணி நிலேகனி உள்ளிட்ட இந்தியாவின் செல்வாக்குமிக்க பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இணைந்து இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.
TIME100 Next India பட்டியலில் திரைத்துறை நடிகர், நடிகையரில் ஆலியா பட், நயன்தாரா, சமந்தா, சாய் பல்லவி, தில்ஜித் தோசாஞ், விக்கி கௌஷல், ஆர்யன் கான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இயக்குநர்கள் பாயல் கபாடியா, பா. ரஞ்சித், அனுபர்ணா ராய், தேஜா ரியோ ஆகியோரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இசைத்துறையில் அனிருத் ரவிச்சந்தர், பாடகர் அறிவு, ஃபஹீம் அப்துல்லா, ஜஸ்லீன் ராயல், பிரதீக் குஹாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறையில் ஸ்கைரூட் நிறுவனத்தின் பவன் குமார் சந்தனா, பியூஷ் பன்சால், ராதிகா குப்தா, தருண் மேத்தா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். விளையாட்டுத் துறையில் ஹர்மன்ப்ரீத் கவுர், லவ்லினா போர்கோஹைன், சானியா மிர்சா, வித்யா ராம்ராஜ், வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் மற்றும் சுகாதாரத் துறைகளிலும் பல்வேறு சாதனையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலுக்காக மூன்று சிறப்பு அட்டைப் படங்களையும் TIME வெளியிடுகிறது. அவற்றில் ஆலியா பட் மற்றும் ஸ்கைரூட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு அட்டையில் ஆர்யன் கான், பாயல் கபாடியா, தேஜா ரியோ ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இந்தியாவின் வளர்ந்து வரும் தலைவர்களை உலகளவில் அறிமுகப்படுத்தும் முயற்சியாக, TIME100 Next India சிறப்புப் பதிப்பு டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் பட்டியல் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், டிசம்பர் 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.