5 நாட்களில் 3 கொலைகளை செய்து மீரட் போலீசாரை டிக் டாக் வில்லன் ஒருவர் அதிரச்செய்துள்ளார்
உத்திரப்பிரதேசம் பிஜ்னார் பகுதியில் 5 நாட்களுக்குள் 3 கொலைகள் அடுத்தடுத்து நடந்தன. கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 கொலைகளையும் செய்தது 30 வயதான ஒருவர்.
உத்திரப்பிரதேசம் பிஜ்னார் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்வினி குமார். தான் ஒரு வில்லன் என ஜானி தாதா என்ற பெயரில் டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவது அஷ்வினி குமாரின் வழக்கம். சமூக வலைதளங்களில் தன்னை வில்லன் என்றே சொல்லிக்கொள்ளும் அஷ்வினிகுமார், போதைக்கு அடிமையானவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். பாஜக பிரமுகர் ஒருவரின் மகன், அவரது மருமகன் ஆகியோரை சுட்டுக்கொன்ற அஷ்வினிகுமார் தலைமறைவானார். பின்னர் மீண்டும் திங்கள்கிழமை, நிகிதா சர்மா என்பவரை சுட்டுக்கொன்றார்.
துபாயில் வேலைபார்த்து வந்த நிகிதா, தன்னுடைய திருமணத்துக்காக பிஜ்னாருக்கு வந்துள்ளார். அதனை தெரிந்துகொண்டே நிகிதாவை கொலை செய்துள்ளார் அஷ்வினிகுமார். இது குறித்து தகவல் தெரிவித்த நிகிதாவின் உறவினர்கள், 2002ம் ஆண்டு அஷ்வினிகுமாருக்கும் நிகிதாவுக்கும் இடையே பிரச்னை இருந்தது. அதற்கு நிகிதா துபாய்க்கு சென்றுவிட்டார். மீண்டும் தற்போது தான் இந்தியா வந்தார் என தெரிவித்தனர்.
நிகிதாவின் கொலைக்கான காரணம் குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்தாலும், மற்ற இரு கொலைகளையும் அஷ்வினி குமார் ஏன் செய்தார் என போலீசாருக்கு புரியவில்லை. போதைக்கு அடிமையானதால் அஷ்வினி குமார் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த குற்ற வழக்குமே இல்லாத ஒருவர் திடீரென 3 கொலைகளை அடுத்தடுத்து செய்தது போலீசாரை அதிரச் செய்துள்ளது. தலைமறைவான அஷ்வினி குமாரை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.