திகார் சிறைச்சாலைகள் துறை டிஜிபி சந்தீப் கோயல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, திகார் மத்திய சிறை எண் 4 இன் கண்காணிப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போது டிஜிபி சந்தீப் கோயலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போதுவரை டெல்லி சிறையில் 20 ஊழியர்கள் உட்பட 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், நாட்டில் உள்ள 1,350 சிறைகளில் 26% சிறைகளில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது. மொத்தமுள்ள 1350 சிறைகளில், 351 சிறைகளில் ஆகஸ்ட் 31 வரை கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தேசிய தலைநகரான டெல்லியில் உச்சத்தை எட்டியுள்ளது, வல்லுநர்கள் எதிர்வரும் நாட்களில் இத்தொற்று குறையும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்” என கூறியுள்ளார் . டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.56 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கையும் 5,087 ஆக உயர்ந்துள்ளது.