இந்தியா

காணாமல்போன புலியை தேடிப்பிடித்த வனத்துறை: பெருமூச்சுவிட்ட மக்கள்..!

webteam

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வன உயிரியல் பூங்காவில் காணாமல் போன புலியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.

லயன்ஸ் சஃபாரி பூங்காவில், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயதுடைய புலி இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. புலி தப்பியதை அறிந்த பூங்காவின் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பூங்காவை சுற்றி ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பூங்காவின் பின்புறம் புலி இருப்பது கண்டறியப்பட்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனால் பூங்காவின் அக்கம்பக்க மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது புலியின் உடல் நிலை சீராக இருப்பதாக, வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும், கூண்டில் இருந்து புலி தப்பித்தது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் துறை சார்ந்த அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.