இந்தியா

வந்தே பாரத் ரயிலில் 2 வாரங்களுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்தது

வந்தே பாரத் ரயிலில் 2 வாரங்களுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்தது

Rasus

வந்தே பாரத் ரயில் முதல் வணிக ரீதியிலான பயணத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்கான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 15-ஆம் தேதி கொடியசைத்து துவக்கி வைத்தார். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்று கூறப்பட்ட வந்தே பாரத் ரயில் முதல் பயணத்திலேயே பழுதாகி பாதியில் நின்றது. முதல் முறையாக டெல்லியிலிருந்து வாரணாசிக்கு வெற்றிகரமாக வந்தடைந்த வந்தே பாரத் ரயில் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய போது தான் பாதி வழியில் பழுதாகி நின்றது. முதல் பயணத்திலேயே ரயில் பழுதானதால் பல விமர்சனங்கள் எழுந்தன.

இதனிடையே இது குறித்து ரயில்வே அமைச்சகம் அளித்த விளக்கத்தில், ''ரயிலின் கடைசி நான்கு பெட்டிகளுக்கிடையேயான அடிப்படை அலகின் தொடர்பில் சிக்கல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயிலின் மீது வெளிப்புறத்தில் ஏதோ ஒரு பொருள் தாக்கியிருக்கிறது. அதனால் ரயிலின் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு பிரேக்கை இயக்கியிருக்கிறது. அதன் பின்னர் பழுதுகள் சரிசெய்யப்பட்டு டெல்லிக்கு மீண்டும் இயக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்முறையாக வணிக ரீதியிலான பயணத்தை வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அடுத்த இரண்டு வாரங்களுக்கான டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளார். டிக்கெட்டிற்கு முந்துங்கள் என்றும் கூறியுள்ளார். முன்னதாக வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “மோடிஜி, மேட் இன் இந்தியா குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். இது தோல்வியில் முடிந்தது எனப் பெரும்பாலானவர்கள் உணர்கிறார்கள். இதை எவ்வாறு செய்வது என்று காங்கிரஸ் கட்சி சிந்திக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் "எனத் தெரிவித்திருந்தார்.