இந்தியா

தமிழக - கேரள எல்லை வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா - இளம்பெண் உட்பட மூவர் கைது

webteam

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி கலால்துறை சோதனைச் சாவடியில் கேரள கலால்துறை ஆய்வாளர் ஜார்ஜ் ஜோசப், கலால்துறை பெண் அலுவலர் ஸ்டெல்லா உம்மன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழகத்தில் இருந்து வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில், அரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரையும் கஞ்சாவையும் பறிமுதல் செய்த கலால் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிவில், திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த இளம்பெண் மிதுலா (26), அதே பகுதியைச் டிட்டோ (26), அப்துல் ரசாக் (40) ஆகிய மூவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி திருவனந்தபுரம் பகுதியில் விற்பனை செய்ய கடத்தியதாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சொகுசு வாகனங்களில் பெண்களை முன் இருக்கையில் அமர வைத்து போதை பொருட்கள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா இவர்கள் என்ற கோணத்தில் கலால் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது