மாதிரிப்படம் pt web
இந்தியா

மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை... மூவர் கைது

மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி இருக்கிறார். அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன..

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 170 கிமீ தொலைவில் துர்காப்பூர் அமைந்திருக்கிறது. இங்கிருக்கும் ஓர் தனியார் கல்லூரியில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி, தனது நண்பருடன் உணவருந்த சென்றுவிட்டு மீண்டும் வரும்போது, வழியில் இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருடன் சென்ற சக மாணவர் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேடும் பணியில், காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதோடு மருத்துவக் கல்லூரி ஊழியர்கள், மாணவியுடன் வந்த அவரது நண்பர் உள்ளிட்டோரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வளாகத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வலியுறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாநில அரசு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி

இந்த சம்பவத்தை வைத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில பாஜகவினர் விமர்சித்துவரும் நிலையில், இதை அரசியலாக்கக்கூடாது என திரிணமுல் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க, ஒடிசாவில் இருந்து அரசு அதிகாரிகள், மேற்கு வங்கத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களில் மூவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். குற்றம் நடந்து 36 மணி நேரத்திற்குப் பிறகு இந்த கைதுகள் நிகழ்ந்திருக்கும் சூழலில் இன்னும் 2 பேர் தலைமறைவாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.