இந்தியா

‘உணவு கொடுங்கள், இல்லையெனில் ஊருக்கு அனுப்புங்கள்’: போராடிய தொழிலாளர்கள்.. போலீஸ் தடியடி

‘உணவு கொடுங்கள், இல்லையெனில் ஊருக்கு அனுப்புங்கள்’: போராடிய தொழிலாளர்கள்.. போலீஸ் தடியடி

webteam

கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்று கூடி தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் புலம்பெயர்ந்த் தொழிலாளர்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தொழிலாளர்கள் பொறுமையை மீறி போராட்டக்களத்திலேயே குதித்து விட்டனர்.

 கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அரசு முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த அறிவுறுத்தல்கள் எதையும் பின்பற்றாமல் மும்பையில் திடிரென ஆயிரணக்கான மக்கள் கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை திணறிப்போயினர். அதேசமயம் கொரோனா பரவும் என்ற அச்சத்தால் உடனே அனைவரையும் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். கூட்டம் கலைந்து ஓடினாலும், பலர் ஓரிடத்தில் தான் இருந்தனர். பின்னர் மெல்ல மெல்ல கூட்டம் முழுவதும் கலைந்தது.

கொரோனா பரவும் என்பதை மறந்து கூட்டம் கூடியது ஆபத்தான செயல்தான் என்றாலும், அங்கே கூடியவர்களின் நோக்கம் கொரோனா வைரஸை பரப்புவதாக இல்லை. அவர்கள் தங்களுக்கு உணவு வேண்டும் என்றே முழக்கமிட்டனர். இல்லையென்றால் வீட்டிற்காவது அனுப்புங்கள் எனக் கேட்டனர். ஆனாலும் அவர்கள் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளது. அவர்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.

இதுபோன்று ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினால், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை வலிமை இழந்துவிடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், மும்பையில் நடைபெற்ற இந்த சம்பவம் தவிர்த்திருக்கப்பட வேண்டியது என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்கள் இன்று இயங்க தொடங்குவதாக நினைத்து கூடிவிட்டார்கள்” என்று கூறினார்.