இந்தியா

'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா

'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா

webteam

ஒரு குடிசை வீட்டையும், ஒரு சைக்கிளை மட்டுமே சொந்தமாக வைத்துள்ள ஒடிசாவைச் சேர்ந்த எம்பி பிரதாப் சந்திராவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது

மிகப்பெரிய ஜனநாயகத்திருவிழாவான மக்களைவைத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. கட்சிகளின் கூட்டணி, வேட்பாளர்களின் அனல் பறக்கும் பரப்புரை, 7 கட்ட வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்தது. விதவிதமான வேட்பாளர்களை அனைத்து கட்சியினரும் களம் இறக்கினர். 

பட்டதாரிகள், சமூக ஆர்வலர்கள், சினிமா துறையினர், விளையாட்டு வீரர்கள் என பலரும் களம் கண்டனர். இந்த தேர்தலில் அதிகம் கவனம் ஈர்த்த வேட்பாளர்களில் ஒருவர் ஒடிசாவைச் சேர்ந்த பிரதாப் சந்திரா சாரங்கி. 

பாஜகவைச் சேர்ந்த பிரதாப் சந்திரா. பொதுவாக வேட்பாளர்கள் கார், வேன், ஹெலிகாப்டர் என எல்லா வகையில்  பரபரப்பாய் பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால் பிரதாப் சந்திராவின் பிரசார வாகனம் சைக்கிளும், ஆட்டோவும் தான். இவர் மது , ஊழல், போலீஸ் அராஜகம் ஆகியவற்றுக்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பாலசூர் மற்றும் மயூர்பான்ச் பகுதி பழங்குடி குழந்தைகள் படிக்க ஏதுவாக அரசுத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை கட்டிக்கொடுக்க வழிவகை செய்தவர். தொடர்ந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

64 வயதன பிரதாப் சந்திரா, திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது தாய் இறக்கும் வரை அவருடன் வசித்து வந்தார். கடந்த வருடம் தாய் இறக்கவே தற்போது தனியாக குடிசை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். 

சிறு வயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு ஈடுபாடு கொண்டிருந்த பிரதாப் சந்திராவை பாலசூர் தொகுதியில் பாஜக நிறுத்தியது. தன்னை எதிர்த்து நின்ற பிஜு ஜனதா தள கட்சியின் கோடீஸ்வர வேட்பாளரான ரமீந்தர குமாரை 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதாப் சந்திரா தோற்கடித்தார்.

ஒரு குடிசை வீட்டையும், ஒரு சைக்கிளை மட்டுமே சொந்தமாக வைத்துள்ள பிரதாப் சந்திராவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். குடிசை வீட்டில் அமர்ந்துக்கொண்டு ஒரு பையில் சில ஆடைகளை அடுக்கிக்கொண்டு டெல்லி புறப்பட்ட பிரதாப்பின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

பிரதாப் சந்திரா ஒரு எளிமையான எம்பி. நிச்சயம் அவர் எளியவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்வார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.