இந்தியா

ஆதிவாசி மதுவை மறக்க முடியுமா..?.. வைராக்கியத்தில் சாதித்த தங்கை..!

Rasus

கேரளாவில் அரிசி திருடியதாக கூறி அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசி மதுவின் சகோதரி தற்போது கேரள காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார்.

கேரளாவில் பசிக்கு அரிசி திருடியதாக கூறி அடித்துக் கொல்லப்பட்ட மதுவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. மதுவை கட்டி வைத்து அடித்த கும்பல் அதனை செல்ஃபி எடுத்தும் முகநூலில் பதிவிட்டது. கேளரா மட்டுமில்லாமல் நாட்டையே உலுக்கிய சம்பவமாக இது அமைந்தது.

இந்நிலையில் அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசி மதுவின் சகோதரி தற்போது கேரள காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். கேளராவில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 73 பேர் போலீஸ் வேலைக்கு தேர்வாகியுள்ளனர். அதில் ஒருவர் தான் மதுவின் தங்கை சந்திரிகா. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்திரிகாவுக்கு அதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

தன் அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருவதாக கூறியுள்ளார் சந்திரிகா. இதுகுறித்து அவர் பேசும்போது “ 12-ஆம் வகுப்பு முடித்துள்ளேன். போலீஸ் வேலைக்காக தேர்வு எழுதியிருந்தேன். எனக்கான நேர்காணல் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தான் என் அண்ணன் அடித்துக்  கொல்லப்பட்டார். அதனால் சோகத்தில் இருந்த எனக்கு நேர்முகத் தேர்விற்கு செல்ல விருப்பமில்லை. அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் சோகம் இருந்தது. ஆனால் என் குடும்பத்தினர் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும்படி என்னை கேட்டுக்கொண்டனர். அதன்படி துயரத்தை மறைத்துக் கொண்டு நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன். நேர்முகத் தேர்வு அறையில் முதல் ஆளாக என்னைத் தான் அழைத்தார்கள். நான் அறையில் நுழைந்ததுமே ததும்பி ததும்பி அழ ஆரம்பித்து விட்டேன். இந்த பதவியை நான் எனது சகோதரருக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு உண்மையிலிலேயே சிறு வயதில் இருந்து போலீஸ் அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் தற்போது இது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

மேலும் கூறிய சந்திரிகா “எங்கள் வீட்டில் மது உள்பட நான்கு குழந்தைகள். மது எங்கள் அம்மா மற்றும் சகோதரிகளிடம் மிகவும் அன்புடன் இருப்பார். எங்கள் அப்பா நான் இரண்டு வயது இருக்கும்போதே இறந்துவிட்டார். என் அம்மா அங்கன்வாடி ஊழியராக பணியாற்றுகிறார். என் அம்மா தான் எனக்கு ரோல் மாடல். சமூக மேம்பாட்டிற்காக நான் நிச்சயம் பாடுபட்டு உழைப்பேன்.” என்றார். சந்திராவுக்கு முருகன் என்ற கணவருடன் நான் வயது மகளும் உள்ளனர்.

Courtesy: TheNewsMinute