இந்தியா

புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக-வை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் சபாநாயகராவது இதுவே முதல்முறை

EllusamyKarthik

புதுச்சேரியில் 15ஆவது சட்டப்பேரவையின் சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராவது இதுவே முதல்முறை.

புதுச்சேரியில் சபாநாயகர் - அமைச்சர்கள் பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே இழுபறி நிலவியது. இந்நிலையில் சுமூக முடிவு எட்டப்பட்டு சபாநாயகர், இரண்டு அமைச்சர் பதவிகளை தர முதலமைச்சர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து, பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மணவெளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம், புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் முனுசாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் பலம் அதிகமாக உள்ளதால் செல்வம் சபாநாயகராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவையின் 21ஆவது பேரவை தலைவராக செல்வம் பொறுப்பேற்க உள்ளார். 

சபாநாயகர் தேர்தல் முடிந்ததும் அன்றைய தினமே அமைச்சர்கள் பதவி ஏற்பதற்கான நடவடிக்கைகளை இரு கட்சிகளும் மேற்கொண்டுள்ளன. கடந்த ஒன்றரை மாதமாக அமைச்சர் பதவிக்கான பங்கீட்டில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே நீடித்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.