பாஜக ஆட்சியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே ஆதரிக்க மாட்டார்கள் என்று காங். கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பாஜகவுடன் அஜித்பவார் கூட்டணி ஏற்படுத்தியிருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்று சரத்பவார் விளக்கம் அளித்துள்ளார். இந்தக் குழப்பம் குறித்து உத்தவ் தாக்ரேவும் சரத் பவாரும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இதனிடையே மும்பை மாநில காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேல்மட்ட தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் திடீர் அரசியல் மாற்றம் குறித்து, “இந்த நடவடிக்கை அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. இதைத்தான் கோவாவிலும் மேகாலயாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் பாஜக செய்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எந்த எம்எல்ஏவும் இதை ஆதரிக்க மாட்டார்கள். அஜித் பவார் அவர்களுடன் சேர்ந்து இதனை செய்துள்ளார். இது அவரது தனித்த முடிவு” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.