தேவேந்திர ஃபட்னாவிஸின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக கடந்த சனிக்கிழமை காலை பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவாரும் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இவர்களின் பதவியேற்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியமைக்க முடியும் என்று பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. இது தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு கிடைத்த தோல்வி மட்டும் இல்லை. அவரை டெல்லியிலிருந்து இயக்கிய தலைவர்களுக்கும் கிடைத்த தோல்வி.
மேலும் இன்று மாலை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்தக் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த தலைவர் தேர்ந்தெடுக்க பட உள்ளார். என்னை பொருத்தவரை அது உத்தவ் தாக்ரேவாக தான் இருக்கும். இந்தக் கூட்டத்திற்கு பின், மூன்று கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்” எனத் தெரிவித்தார்.