இந்தியா

”இனி ஃபோன் பயன்படுத்தினால் ஸ்பாட் ஃபைன்” கறார் காட்டும் கிராம பஞ்சாயத்து.. எங்கு தெரியுமா?

JananiGovindhan

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எவருமே செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்றும், கையும் களவுமான பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவு போட்டுள்ளது. கடந்த நவம்பர் 11ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், குழந்தைகள் செல்ஃபோனுக்கு அடிமையாவதில் இருந்து தடுக்கவே இந்த உத்தரவு போடப்பட்டிருக்கிறது என பன்சி கிராம நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவின் யவதமால் மாவட்டத்தில் உள்ள பன்சி என்ற கிராமத்தில்தான் இந்த முக்கிய தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசியுள்ள சார்பஞ்சாயத்து நிர்வாக உறுப்பினர் கஜானன் தாலே, “கொரோனா ஊரடங்கு காலத்தின் போது அதிகப்படியான மற்றும் கட்டுப்பாடற்ற செல்ஃபோன் பயன்பாட்டால் குழந்தைகள் அதற்கு அடிமையாகி போயிருக்கிறார்கள்.

எந்நேரமும் இணைய தளங்களை பயன்படுத்தியும், கேம் விளையாடிக் கொண்டும் இருப்பது இந்த வயதிற்கு ஏற்கதக்கதல்ல என்பதால் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இதை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் நிறைந்திருந்தாலும், அதனை கண்டறிந்து உரிய ஆலோசனைகளை கொடுக்கவும் ஏற்பாடு செய்வோம். ஆகையால் குழந்தைகள் மொபைல் ஃபோனை பயன்படுத்தினால் கட்டாயம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும் கஜானன் தாலே தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து பன்சி கிராம நிர்வாகத்தின் உத்தரவுக்கு குழந்தைகள் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை, ஆனால் வரவேற்கத்தக்க முடிவுதான் எனவும் அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், “மாணவர்கள் மத்தியில் நல்ல பழக்கங்களை புகுத்த இது ஒரு அருமையான முன்னெடுப்புதான்.” என தேஷ்முக் என்ற மாணவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தளத்திடம் கூறியிருக்கிறார். பன்சி கிராம பஞ்சாயத்தின் இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மத்தியில் அமோக வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

முன்னதாக இதே மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மோஹித்யாஞ்சே வத்காவோன் என்ற கிராமத்தில் தினந்தோறும் மாலை 7 முதல் இரவு 8.30 வரை கிராமத்தில் உள்ள எவருமே செல்ஃபோன், டிவி, லேப்டாப், கம்ப்யூட்டர் என எந்த விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் பயன்படுத்தாமல் படிப்பது, எழுதுவது, உற்றார் உறவினர்களுடன் பேசுவது போன்றவற்றை தவறாது செய்து வருகிறார்களாம். இதற்காகவே மாலை 7 மணியானதும் சைரன் ஒலிக்கப்படுமாம்.