இந்தியா

ஒருவரை கூட கொரோனா பாதிக்கவில்லை - 14 மாதங்களாக சாதனைப் படைத்து வரும் ஆந்திர கிராமம்

ஒருவரை கூட கொரோனா பாதிக்கவில்லை - 14 மாதங்களாக சாதனைப் படைத்து வரும் ஆந்திர கிராமம்

webteam

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்காணோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 14 மாதங்களாக ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 4000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு, பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் கூட மக்களில் சிலர் அலட்சியப்போக்குடன் அவசியமில்லாமல் வெளியே சுற்றிவருகின்றனர்.

இதனால் அவர்கள் மட்டுமன்றி அவர்களை சுற்றியுள்ளவர்களும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் கொரோனா 2 வது அலை மட்டுமல்லாது முதல் அலையின் போதும் கூட ஒருவரை கூட கொரோனா பாதிக்காமல் பார்த்திருக்கிறது ஒரு கிராமம். அவர்கள் இதனை எப்படி சாத்தியப்படுத்தினர்.. வாருங்கள் பார்க்கலாம்.

ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது துக்கிரலபாடு கிராமம். 1030 பேர் வசிக்கும் கிராமத்தில் கடந்த 14 மாதங்களாக ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.

இது குறித்து கிராமத்தலைவர் ஜடா ராம்பாபு கூறும் போது, “நாங்கள் மிக கடுமையாக பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கிறோம். திருவிழாக்கள், தேவையில்லாமல் கூடுதல் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தவிர்த்துள்ளோம். வேறு ஊரில் இருந்து வரும் விற்பனையாளர்கள் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அவர்களை நாங்கள் ஊருக்குள் அனுமதிப்பதில்லை.

கிராமத்துமக்கள் அவர்களது உறவினர்கள் வீட்டிற்குச் செல்லவும், தேவையில்லாமல் கூடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கிராமத்தில் யார் ஒருவருக்காவது காய்ச்சல், சளி ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள சிறப்பு தனிமைபடுத்துதல் பகுதியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். முககவசம் அணிதலை நடைமுறையாக்கியுள்ளோம். தினமும் இருமுறை கிருமிநாசினி கொண்டு கிராமம் சுத்தப்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்களும், மருத்துவபணியாளர்களும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்து அனைவரின் உடல்நிலையை கண்காணித்துச்செல்கின்றனர்.” என்றார்.

இது குறித்து தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மேகபதி கெளதம் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும் போது, “ கிராமத்தினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாரட்டுதலுக்கு உரியது. பிறகிராம மக்கள் துக்கிரலபாடு கிராம மக்களை முன்மாதிரியாகக்கொண்டு கொரோனா பரவலை எதிர்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

தகவல் உறுதுணை: https://timesofindia.indiatimes.com/city/vijayawada/this-andhra-pradesh-village-has-not-reported-a-single-covid-19-case-so-far/articleshow/82756683.cms