திரௌபதி முர்மு, சபரிமலை pt web
இந்தியா

சபரிமலை | இறங்குதளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்.. தள்ளிய வீரர்கள்! நடந்தது என்ன?

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர், சபரிமலை அருகே ஹெலிகாப்டர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இறங்குதளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர், சபரிமலை அருகே ஹெலிகாப்டர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இறங்குதளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் கேரள பயணமாக நேற்று, டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, அவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை நேரில் சென்று வரவேற்றனர். தொடர்ந்து, இதனையடுத்து, ராஜ் பவனில் நேற்று இரவு தங்கினார்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

இந்நிலையில், பயணத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் இருமுடி கட்டி சபரிமலையில் ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்யவிருந்த நிலையில், அதற்காக திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் பத்தனம்திட்டாவில் உள்ள பிரதமம் உள்விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடுக்கு சென்றார். அப்போது, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் இறங்குதளம் என்பதால் ஹெலிகாப்டர் சக்கரம் அதில் சிக்கிக்கொண்டது. உடனே காவல் துறையினரும் பாதுகாவலர்களும் ஹெலிகாப்டர் சக்கரத்தை தள்ளிவிட்டு அதை மேலே ஏற்ற உதவினர்.

பின்னர், குடியரசுத் தலைவர் சாலைவழியே சபரிமலை புறப்பட்டார். முதலில் நிலக்கல் பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட்டதாகவும் ஆனால் மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில், வேறு இடத்தில் கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்ட நிலையில், அது சரியாக காயவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சாலை வழிமார்க்கமாக பம்பை சென்ற திரௌபதி முர்மு அங்குள்ள ”மராமத்” சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், தேவஸ்வம் போர்டின் மலையேறும் திறனுள்ள "கூர்க்கா ஜீப்"பில், தற்காலிக பாதையில் பயணம் செய்தார். அப்போது, குடியரசுத் தலைவர் வாகனத்தில் "பிபிஜி" (President's Body Guard) உள்ளிட்ட நான்கு பாதுகாப்பு படை வீரர்களும், வாகன "கான்வே" யில் பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்டவை அடங்கிய ஐந்து வாகனங்களும் சென்றன. பின்னர் சபரிமலை ஐப்பன் கோவிலை அடைந்த அவர், அங்கு சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, கூர்க் வாகனம் மூலம் மலையிறங்கும் அவர், நிலக்கல் சென்றடைந்து அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவுள்ளார்.