இந்தியா

“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்

“குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும்” - திருமாவளவன்

webteam

தாமரை குளம் குட்டைகளில்தான் மலரும் எனவும் தமிழ் மண்ணில் மலராது எனவும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அதிமுக சார்பில் சந்திரசேகர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார். மேலும் அமமுக சார்பில் இளவரசனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவியும், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதியும் களமிறங்கினர். 

இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவுற்ற நிலையில், 3219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். இந்நிலையில், சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தாமரை குளம் குட்டைகளில்தான் மலரும் எனவும் தமிழ் மண்ணில் மலராது. இந்திய அளவில் நாம் எதிர்பார்க்காதது நடந்துவிட்டது. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர். சட்டப்பேரவை தொகுதிகளில் சில இடங்களிலும் திமுக குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியுள்ளது.

இங்கு சாதி வெறியர்களும் மத வெறியர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். என்னை வீழ்த்துவதற்காக 50 லிருந்து 100 கோடி வரை கொட்டி இரைத்தார்கள். சாதி அரசியலை கூர்மைப்படுத்தினார்கள். அவதூறு பிரச்சாரங்களை செய்தார்கள். நான் அனைத்து தரப்பு மக்களையும் மதிக்கிறவன், நேசிக்கிறவன். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு நான் எதிராக இருப்பது போல் ஒரு தோற்றத்தை அரசியலுக்காக உருவாக்கி விட்டனர். அந்த அவதூறு தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லா மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிதம்பரம் தொகுதி மக்களுக்கு எனது வெற்றியை காணிக்கையாக்குகிறேன்” எனத் தெரிவித்தார்.