கொரோனா 3 வது அலை தவிர்க்க முடியாதது என்றும் புதிய பரவலை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டும் என்றும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் கூறும் போது, “ கொரோனா 3 வது அலை தவிர்க்க முடியாதது, இது அதிக அளவிலான வைரஸை பரப்பும். 3 வது அலை எப்போது வரும் எனத் தெரியாது. ஆனால் புதிய பரவலை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டும்.
கொரோனா வைரஸின் தற்போதைய மாறுபாடுகளுக்கு இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும். புதிய கொரோனா வகைகள் இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து நாடுகளிலும் உருவாகும்.
ஆனால், அது பரவும் தன்மை இடத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஆகையால் இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்.” என்றார்.
இந்தியாவின் 12 மாவட்டங்களில் 1 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல 7 மாவட்டங்களில் 50,000 லிருந்து 1 லட்சம் நபர்கள் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் 17 மாவட்டங்களில் 50,000த்தும் கீழான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறிப்பாக மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரபிரதேம் உள்ளிட்ட மாநிலங்களில் தோராயமாக 1.5 லட்சம் நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.