இந்தியா

’அவசரத்துக்கு பணம் எடுத்திருக்கிறேன், நான் திருடன் இல்லை’: மெசேஜ் எழுதிவிட்டு சுருட்டிய ’நேர்மைக்கார’ திருடர்!

webteam

வீட்டில் நகை, பணத்தைத் திருடிடபின், மெசேஜ் எழுதிவிட்டுச் சென்ற ’நேர்மையான’ திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடினூர் பகுதியைச் சேர்ந்தவர் சி.கே.முனீரா. இவரது வீடு அங்குள்ள ஜும்மா மசூதி அருகே உள்ளது. இவர் வீட்டுக்கு சிறிது தூரத்தில் ஏ.ஜி.ஆயிஷா என்பவர் வீடு. இவர்கள் இரண்டு பேர் வீட்டிலும் நேற்று முன் தினம் பீரோ உடைக்கப் பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

முனீரா, உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு, இரண்டு சவரன் நகை, ரூ. 32 ஆயிரம் ரொக்கம் ஆகியவைத் திருடப்பட்டது தெரிய வந்தது. வீட்டுக்குள் இருந்த படிகட்டின் அருகே இருந்த தூணில், ‘அவசரத் தேவைக்காக பணத்தை எடுத்திருக்கிறேன். கண்டிப்பாகத் திருப்பி தந்துவிடுவேன். நான் திருடன் இல்லை’ என்று எழுதப் பட்டிருந்தது.

இதே போல ஆயிஷாவின் வீட்டின் கதவை உடைத்து திருட்டு நடந்துள்ளது. அவர் வீட்டில் என்னென்ன பொருட்கள் காணாமல் போனது என்பது பற்றி உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.