தெலங்கானா எக்ஸ் தளம்
இந்தியா

தெலங்கானா | ஒயின்ஷாப்பில் கொள்ளையடிக்கச் சென்ற திருடன்.. மதுவைக் கண்டதும் குடித்துவிட்டு உறக்கம்!

தெலங்கானாவில் ஒயின் ஷாப்பில் கொள்ளையடிக்கச் சென்ற ஒருவன், அங்கேயே மதுவைக் குடித்துவிட்டு உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

சமீபகாலமாக, ஒருசில இடங்களுக்குச் செல்லும் திருடர்கள் கொள்ளையடித்துவிட்டு, அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்கும் காட்சிகள் இணையத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதுபோன்ற சம்பவம் அண்டை மாநிலமான தெலங்கானாவிலும் நடைபெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள நரசிங்கி நகரில் ஒயின்ஷாப் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஒயின் ஷாப்புக்குள் நுழைந்துதான் அந்த திருடன் கொள்ளையடித்துள்ளான். அதற்கு முன்பு அவன், ஒயின்ஷாபின் மேல் உள்ள கூரை ஓடுகளை அகற்றி உள்ளுக்குள் இறங்கிய அவன், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை முதலில் செயலிழக்கச் செய்துள்ளான். அதன்பிறகு, அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளான்.

இவற்றை எல்லாம் தன் திட்டப்படி சிறப்பாய் முடித்த அவனுக்கு மதுவைக் கண்டதும் குடிக்க ஆர்வம் எழுந்துள்ளது. இதனால், அவன் மதுவில் மூழ்கிப் போக அங்கேயே உறங்கியுள்ளான். மறுநாள் காலை கடைத் திறப்பின்போது இதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்குச் சென்ற போலீசார் அவனைக் கைது செய்தனர்.

telangana

இதுதொடர்பாக அந்த ஒயின்ஷாப்பின் பொறுப்பாளர் நர்சிங், "டிசம்பர் 29ஆம் தேதி இரவு 10 மணிக்கு கடையை அடைத்தோம். மறுநாள் காலை 10 மணிக்குத் திறந்தபோது, ​​அவர் மயங்கிக் கிடந்ததைக் கண்டோம். உள்ளே நுழைவதற்கு கூரை ஓடுகளை அகற்றியுள்ளார். பின்னர், பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். அவன் போதையில் இருந்ததால், போலீசார் அவன்மீது வழக்குப் பதிவு மட்டும் செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.