இந்திய விடுதலைக்காக போராடிய வீரர்கள் இரண்டு வழிகளை தேர்வு செய்தார்கள் ஒன்று அகிம்சை இன்னொன்று ஆயுதம் ஏந்துவது. அதில் பகத் சிங் மக்கள் முன்
அன்பையும், அதிகாரத்தின் முன் ஆயுதத்தையும் ஏந்தி நின்றான். இந்திய விடுதலைக்காக ஒப்பற்ற காரியங்களை செய்த தெளிந்த போராளியான பகத்சிங் தூக்கிலிடப்பட்ட
தினம் இன்று.
லாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்குப் பழி தீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு, சுக்தேவ், ஆசாத் உடன் இணைந்து திட்டம் தீட்டினார் பகத்
சிங். அதற்குக் காரணமான ஸ்காட்டைக் கொல்வதற்குப் பதிலாகச் சாண்டர்சை கொன்று விட்டார்கள் அவர்கள். அச்சம்பவத்திற்கு முன்பிருந்தே ஆங்கிலேய அரசு அவர்களை
தேடிக் கொண்டிந்தது. பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த ஆவணங்களில் பகத் சிங் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்பது தெரிய
வந்தது.
போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடுமையான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும்
பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தை தேர்வு செய்து குண்டுகளை வீசினார்கள். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்று குரல்
கொடுத்துக் கொண்டே அதைச் செய்து முடித்தார்கள் வீரர்கள். பிறகும் கூட அவர்கள் தப்பிக்க முயலவில்லை. கம்பீரமாகச் சரணடைந்தார்கள். புரட்சி என்பது எளிய
மக்களைக் கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டுக் காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால்
பேசினோம் என்று கப்பீரமாகச் சரணடைந்த பின்னர்க் கோர்ட்டில் சொன்னார் அவர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கோரினார். பகத் சிங் தன் தந்தையை தான்
இனிமேல் தந்தை என்று சொல்லமாட்டேன். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதினார். நாட்டுக்காக சாகப் போகிறோம் என்ற
பெருமிதத்தில் தண்டனை நாள் நெருங்க நெருங்க பகத் சிங்கின் எடை கூடிக் கொண்டே போனது. தூக்கு மேடையை தொடுகிற பொழுது, ‘மரணத்தைப் புன்னகையோடு
எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தைப் பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள்!’ என்று சொல்லிவிட்டு பகத்சிங் மரணத்தின் வாசலைத் தொட்டார்.
அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதமாகத் தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று
கேட்கிறீர்களா...? சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன்.” என்றார். ‘ஏன்...?’ எனக் கேட்டதற்கு, ‘ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன்
பேசிக்கொண்டு இருக்கிறேன். வந்து விடுகிறேன்!’ என்றார். அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் ‘அரசும் புரட்சியும்’ என்ற நூல்.
முதலில் ‘பகத் சிங்’கை தூக்கிலிடுவதற்காக குறிக்கப்பட்ட நாள் மார்ச் 24, 1931 ஆனால் குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்பாகவே அவர் தூக்கிலிடப்பட்டார். அவருடன்
ராஜகுரு, சுக்தேவ் ஆகிய இரண்டு புரட்சியாளர்களும் தூக்கிலிடப்பட்டனர். 23’ஆம் தேதி மார்ச் மாதம் மாலை நான்கு மணிக்கெல்லாம் சிறைக்கைதிகள் அவரவர் செல்களில்
அடைக்கப்பட்டனர். தூக்கு மேடைக்கு மூவரும் அழைத்துச் செல்லப்பட்ட போது பகத் சிங் உரத்த குரலில் ‘ஏகாதிபத்தியம் ஒழிக, இன்குலாப் சிந்தாபாத்’ என முழக்க மிட்டார்.
கைதிகளும் ஒருமித்த குரலில் அதனை எதிரொலித்தனர். அந்த சத்தத்தில் லாகூர் சிறையின் சுவர்கள் ரிக்டரில் அதிர்ந்தது. மூவரும் தூக்குக் கயிற்றின் முன்
நிறுத்தப்படுகின்றனர். உங்களில் யார் முதலில் சாகத் தயார் என கேட்க்கப்பட்டது சுக்தேவ் முதலின் செல்ல விருப்பம் தெரிவித்தார். மூவருக்கும் 1931’ஆம் ஆண்டே இதே
மாலைப் பொழுதில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. தூக்கிலிடப்பட்ட பிறகு அவர்களது மரணத்தை உறுதி செய்யச் சொல்லவே அதனை செய்ய மறுத்த அதிகாரி அவரது
அறைக்குச் சென்று கதறி அழுதிருக்கிறார்., பிறகு மருத்துவர்கள் ஜேஜே.நெல்சன், எஸ்.எம்.ஜோதியுடன் சேர்ந்து இளைய அதிகாரி ஒருவர் மரணத்தை உறுதி
செய்திருக்கிறார்.
மூவரின் உடலையும் சிறைக்குள்ளேயே தகனம் செய்வது என அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் விவரம் அறிந்து சிறைக்கு வெளியே காத்திருந்த மக்கள் சிறையை
தாக்கக் கூடும் என அஞ்சப்பட்டதால். சிறையின் பின் சுவற்றை உடைத்து ஒரு ட்ரக் வரவழைக்கப்பட்டது, அதில் பகத் சிங் உட்பட மூவரின் உடலும் பயனற்ற பொருளை
ஏற்றுவது போல மரியாதை குறைவாக ஏற்றப்பட்டு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட முடிவு செய்யப்பட்டது.
இரவு பத்து மணிக்கு இறுதிச்சடங்குகளை அதிகாரிகள் செய்யும் போது அங்கு மக்கள் கூட்டம் வந்தது எனவே சிதையை பாதியிலேயே விட்டு விட்டு அவர்கள்
ஓடிவிட்டதாகவும் பிறகு குற்றம் சாட்டப்பட்டது. இதனை அங்கிருந்த பத்திரிக்கையாளர் மவுலானா ஜாபர் அலி பதிவு செய்கிறார். வீரர்களின் பிணங்களை கைப்பற்றிய மக்கள்
முழுமையாக சிதையை எரித்து மரியாதை செய்திருக்கின்றனர். பிறகு புரட்சிவீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மூன்று மைல் தொலைவு வரை பேரணியும்
நடத்தப்பட்டது.
கலை சாவை மதிப்பதில்லை என்பார்கள்., புரட்சியும் தான்.!