இந்தியா

“ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம்” - தேவகவுடா வேதனை

webteam

கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றனது. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சி படுத்தோல்வியடைந்தது. இந்த இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் மட்டும் வெற்றிப் பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.


  
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கர்நாடகாவில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தற்போது நடந்துகொள்வதை பார்த்தால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம். இரு கட்சிகளின் தலைவர்கள் கூறிவரும் கருத்துக்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான் ராகுல் காந்தியிடமும் கூறியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமய்யா, “காங்கிரஸ் கட்சி தனியாக மக்களவைத் தேர்தலை சந்தித்திருந்தால் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றிருப்போம்” எனத் தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவிலுள்ள 28 இடங்களில் பாஜக 25 இடத்தில் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் தலா ஒரு இடத்தையும், சுயேட்சையாக சுமலதா ஒரு இடத்திலும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.