இந்தியா

“செல்ஃபி எடுப்பது மனநோயா?” - மக்களவையில் சுவாரஸ்யமான விவாதம்

webteam

மக்களவையில் செல்ஃபி குறித்து உறுப்பினர்களிடையே ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது.

தன்னைத்தானே சுயமாகப் படம்பிடித்துக் கொள்வதுதான் செல்ஃபி என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். செல்ஃபி மோகத்தால் பல விபரீதங்கள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அபாயகரமான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து பல உயிர்கள் பறிபோய் உள்ளன. 

இந்நிலையில், செல்ஃபி எடுப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மத்திய அரசின் நடவடிக்கை என்ன? செல்ஃபி பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள் என்ன? தன்னை தானே செல்பி எடுத்து பாதிப்புக்குள்ளானவர்களின் பட்டியல் ஆகியவற்றை வெளியிடுமாறு மக்களவையில் ஓம் பிரகாஷ் யாதவ், ஹரி சந்திரா ஆகிய எம்.பிக்கள் தனித்தனியே கோரிக்கை விடுத்தனர். 

பரபரப்பான சூழலில் இயங்கும் மக்களவையில் இந்த செல்ஃபி குறித்த கேள்வி பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்களைவை முழுவதும் சிரிப்பலை நிரம்பியது. 

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல், உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச வகைப்படுத்தப்பட்ட நோய்களின் பட்டியலில் செல்ஃபி எடுத்துக் கொள்வது ஒரு மனநோயோ அல்லது குறைபாடோ இல்லை என விளக்கம் அளித்தார். 

ஒரு தனி நபர் அதிக முறை செல்ஃபி எடுப்பது ஒரு மனநோயா? அல்லது குறைபாடா?‌ என பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு மக்களவையில் செல்ஃபி குறித்து ஒரு சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது.