243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆட்சி அமைக்க 122தொகுதிகள் தேவையாக உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதில் நிதிஷ் குமார் கட்சி முன்னிலை பெறுவது பற்றி பத்திரிகையாளர் ரகு புதிய தலைமுறையில் பகிர்ந்து "மக்களுக்கு நிதிஷ் குமார் மீது எந்த எதிர்ப்பும் இல்லை. 20 வருடமாக இருந்திருந்தாலும் இடையில் சின்ன இடைவெளியே இருந்தது. அவருக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தாலும், மக்கள் அவரையே விரும்புகிறார்கள். இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.
காங்கிரஸுக்கு அதிக சீட் கொடுத்தது தவறு ஆர்.ஜே.டி அதை செய்திருக்க கூடாது. யாதவை மையமாக கொண்ட பார்ட்டியாக இருப்பது அவர்களுக்கு ஒரு பின்னடைவு என நினைக்கிறேன். ஹரியானாவில் ஜாட்ஸை நம்பி ஜெயிக்கலாம் என காங்கிரஸ் நினைத்தார்கள். அது அவர்களுக்கு பெரிய அடியாக அமைந்து பிஜேபி வென்றது. அது ஒரு அசாத்திய வெற்றியாக பார்க்கப்பட்டது. அதை ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் செய்கிறார்கள்.
முதன்மையாக இருக்கும் OBC பிரிவினரை வைத்து வெல்லலாம் என ஆர் ஜே டி நம்பினார்கள், அது பொய்யாகிவிட்டது. அவர்களது மக்கள் தொகை 15 சதவீதத்திற்கும் கீழ் தான் இருக்கிறது, ஆனால் அவர்கள் கொடுத்த சீட் 35 சதவீதம். எனவே அந்த பயம் பெற்றவர்களுக்கும் இருக்கிறது. அதே சமயம் நிதிஷ் குமாருடைய சாதி நம்பராக வலுவானது இல்லை. ஆனால் அவரை EBC போன்ற மற்ற சாதியினர் தங்களுக்கான பாதுகாப்பு என பார்க்கிறார்கள். எனவே ஒரு சாதியினரின் ஆதிக்கம் இருக்காது, அதை அவர் அனுமதிக்க மாட்டார் என மற்ற மக்கள் நினைக்கிறார்கள்.
இந்த சாதிய கணக்குகளில் மிகுந்த பயிற்சி பெற்றுவிட்டது பிஜேபி. மராத்தியர்களுக்கு எதிரான கட்சி என மகாராஷ்டிரத்தில் வென்றார்கள், ஜாட்ஸுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காமலே ஹரியானாவில் வெல்ல முடிகிறது. யாதவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை பீகாரில் தோற்கடிக்க முடிகிறது. இதெல்லாம் பிஜேபிக்கு இருக்கும் அரசியல் தெளிவு என்றே சொல்ல வேண்டும். இந்துத்துவ சித்தாந்தத்திற்கு, தலித் எதிராக தான் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களையும் கையாள முடிகிறது. இந்த செயல்திறனை, அவர்கள் சித்தாந்தம் பிடிக்காதவர்கள் கூட ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.
காங்கிரஸ் வென்ற இடங்களில் மாநில கட்சிகள் வலுவாக இல்லை, அல்லது வலு இழந்து கொண்டு இருந்தனர். BRS தெலுங்கானாவில் வலு இழந்தார்கள், JDS கர்நாடகாவில் வலு இழந்தார்கள். அங்கு சித்தராமையா மாதிரியோ, ரேவந்த் மாதிரியோ பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். ஆனால் பீகாரில் அப்படியான ஒரு தலைவரின் பெயரை கூட சொல்லமுடியாது. அடிப்படை கட்டமைப்பில் அவர்கள் தலைமை வலுவாக வேண்டும். அதை அவர்கள் தவிர்க்கவில்லை. ஆனால் அதனை செய்ய முடியவில்லை" என்றார்.