கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற டெல்லி ராணுவ மருத்துவமமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், வென்டிலேட்டர் ஆதரவில்தான் தொடர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ள டாக்டர்கள், எனினும் பிரணாப் முகர்ஜியின் முக்கிய உறுப்புகளின் இயக்கம் மற்றும் சிகிச்சை செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதனையடுத்து பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.