கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் புதுச்சேரியில் நாளை முதல் ஒரு சில திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்விற்கு பின்னர் நாளை முதல் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அனுமதியளித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளின் படி நாளை முதல் புதுச்சேரியில் உள்ள சில திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி திரையரங்குகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் போட்டுப்பட்டு வருகிறது.
மேலும் சில திரையரங்குகளில் ரசிகர்களை கவரும் வகையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.100க்கும் இதேபோல் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ரூ.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு முகக்கவசமும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும் திரையரங்குகளுக்கான ஆன்லைன் புக்கிங்கும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களை வெப்ப பரிசோதனை செய்தும், கைகளை சுத்தம் செய்தும் திரையரங்குகளுக்குள் அனுமதிக்கபட உள்ளனர். மத்திய அரசின் உத்தரவு படி நாள்தோறும் பகல்11.45, மதியம் 3 மணி, மாலை 6.45 ஆகிய 3 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்க கேண்டீன்களில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். திரையரங்குகளில் அரசு அனுமதித்த குளிர்சாதன அளவு மட்டுமே பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப் படுகின்றதா என்பதை கண்காணிக்க வருவாய் துறை அதிகாரிகள் மட்டத்திலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.