டெல்லியிலிருது காத்மாண்டுக்கு செல்ல google map பார்த்து வழிதவறி பரேலிக்கு சென்ற பிரெஞ்சு இளைஞர்கள்.
இப்பொழுதெல்லாம் ஒரு இடத்திற்கு செல்லவேண்டுமென்றால் கூகுள் மேப் பார்த்து சுலபமாக அவ்விடத்திற்கு செல்வோம். ஆனால் சில சமயங்களில் கூகுள் மேப் தவறாக வழிகாட்டி செல்லவேண்டிய இடத்தை தவிர்த்து வேறெங்கோ கூட்டிச்சென்று விடுகிறது.
அந்த வரிசையில் தற்போது கூகுள் மேப்பை நம்பி 2 பிரஞ்சுகாரர்கள் வழிதவறி சென்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரையன் ஜாக் கில்பர்ட் மற்றும் செபாஸ்டியன் ஃபிராங்கோயிஸ் கேப்ரியல் ஆகியோர் பிரான்சில் இருந்து ஜனவரி 7 ஆம் தேதி விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் பிலிபிட்டில் இருந்து தனக்பூர் வழியாக நேபாளத்தில் காத்மாண்டு செல்ல வேண்டியிருந்தது. இரு வெளிநாட்டவர்களும் கூகுள் மேப்ஸ் உதவியின் மூலம் தனது பயணத்தை தொடர நினைத்தனர். கூகுள் ஆப்ஸ் அவர்களுக்கு பரேலியில் உள்ள பஹேரி வழியாக காத்மாண்டு செல்ல ஒரு குறுக்குவழியைக் காட்டியது, அதை நம்பி பிரெஞ்சு இளைஞர்கள் இருவரும் சைக்கிளில் தனது பயணத்தைத் தொடங்கினர். ஆனால் காத்மாண்டுக்கு போவதற்கு பதிலாக இருவரும் சுரைலி அணையை அடைந்து இரவு முழுவதும் அப்பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளனர்.
இதைக்கண்ட அப்பகுதி கிராம மக்கள், இரண்டு வெளிநாட்டினர் சைக்கிளில் சுரைலி அணையை சுற்றி வருவதாக போலிசாரிடம் தகவல் தெரிவிக்கவே... அவர்கள் வந்து பிரெஞ்சு இளைஞர்களை பிடித்து, கிராம அதிகாரி வீட்டில் தங்கவைத்து, பின் அவர்களுக்கு சரியான வழியைக்கூறி வெள்ளிக்கிழமை அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
கூகுள் மேப் பார்த்து ஏமாந்த பட்டியலில் இரண்டு பிரெஞ்சு இளைஞர்களும் இடம்பெற்றுள்ளனர்.