இந்தியா

29ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

29ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

கலிலுல்லா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டத் தொடரை போலவே, குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறவுள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறாத நிலையில், தற்போது 20 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த கூட்டத் தொடர் கூடவுள்ளதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு, காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்ததில் வெடித்த வன்முறை, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள், இந்தக் கூட்டத்தொடரில் வலுவாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.