இந்தியா

சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவி! பரோல் வழங்கிய நீதிமன்றம்

ச. முத்துகிருஷ்ணன்

சிறையில் குற்றவாளியாக தண்டனை பெற்று வரும் கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவியின் கோரிக்கையை ஏற்று 15 நாட்கள் பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். இதற்கிடையில், கணவருடன் திருமண உறவில் ஈடுபடவும், அவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவும் அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் நந்தலாலின் மனைவி ரேகா ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் “சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி குழந்தை பெற்றுக்கொள்வது அவரது அடிப்படை உரிமை. அவர் எந்த குற்றங்களையும் செய்யாத போதும் கணவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை தடுப்பது மனைவியின் உரிமையை மோசமாக பாதிக்கும்” என கூறியது. ஒரு குற்றவாளியை இயல்பாக்குவதற்கும், அவர்களின் நடத்தையை மாற்றுவதற்கும் திருமண உறவுகள் உதவும் என்பதையும் கவனத்தில் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.

எந்த தவறையும் செய்யாமல் கணவன் இல்லாமலும், பிள்ளைகள் இன்றியும் தவிக்கும் நிலைக்கு மனைவி தள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியது நீதிமன்றம். எந்த வெளிப்படையான விதிகளும் இல்லாத நிலையிலும் பல சமூக விஷயங்களை கருத்தில் கொண்டு மனைவியுடன் திருமண உறவில் ஈடுபட்ட குழந்தை பெற்றுக்கொள்ள ஆயுள் தண்டனை கைதி நந்த லாலுவுக்கு 15 நாட்கள் அவசர பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.