இந்தியா

பேஸ்புக்கில் அரசியல் பதிவிட்டவரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்த பேஸ்புக் அதிகாரிகள்!

பேஸ்புக்கில் அரசியல் பதிவிட்டவரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்த பேஸ்புக் அதிகாரிகள்!

webteam

பேஸ்புக்கில் அரசியல் பதிவிட்டவரின் வீட்டுக்கே சென்று பேஸ்புக் அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் சமூக வலைதளங்களிலும் கட்சிகள் விளம்பரங்களை பதிவிட்டு வருகின்றன. அதற்காக அதிக செலவும் செய்து வருகின்றனர். அதே வேளையில் தேர்தல் காலத்தில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ட்விட்டர் தளம் இந்தியாவில் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது. அதேபோல ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்கள் அளிப்பதில் கட்டுபாடு விதித்துள்ளது. அத்துடன் போலி கணக்குகளை முடக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அரசியல் பதிவிட்டுள்ளார். அந்த நபரின் வீட்டுக்கே சென்ற பேஸ்புக் அதிகாரிகள் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. IANS இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பதிவிட்ட அந்த நபர், ''பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீசார் வீட்டுக்கு வருவதை போல என் வீட்டு வாசலில் பேஸ்புக் அதிகாரிகள் நின்றிருந்தார்கள். என்னுடைய ஆதார் அட்டையை சோதனை செய்தார்கள். நான் மட்டும் தான் அரசியல் பதிவு போடுகிறேனா? இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. சமூக வலைதளத்தில் பயனாளர்களின் பிரைவசி என்பது கேள்விக்குறியாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு பேஸ்புக்கிற்கு IANS செய்தி நிறுவனம் சில மின்னஞ்சல்களையும் அனுப்பியுள்ளது. ஆனால் பேஸ்புக் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஒரு பதிவுக்காக வீடு வரை சென்று சோதனை செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.