அரசின் முக்கிய பணியிடங்களுக்கு தனியாரை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்திய அமைச்சகங்களில் உள்ள இணை செயலாளர் பதவிகளுக்கு பொதுவாக ஐஏஎஸ் தேர்வில் தகுதி பெற்றவர்களே தேர்வு செய்யப்படுவர். ஆனால், அந்த நடைமுறையை மாற்றி முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல ஆர்வமுடைய தகுதியான இந்தியர்கள் இணை செயலாளருக்கு இணையான அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு விளம்பரப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி எல் புனியா, ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சகங்களில் முக்கிய பணிகளில் அமர்த்தப்படுவர் என தெரிவித்துள்ளார். அரசின் கொள்கைகளில் அவர்களின் தலையீடு அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே வேளையில், மிகச்சிறந்த நபரை தேர்வு செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில் தான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.