பாதாள வீடு
பாதாள வீடு புதிய தலைமுறை
இந்தியா

உத்தரப்பிரதேசம்: திரைப்பட பாணியில் பாதாள வீட்டைக் கட்டிய பப்பு பாபா! வியக்க வைக்கும் கதை

PT WEB

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் இர்ஃபான். ’பப்பு பாபா’ என்றழைக்கப்படும் இவர், கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வருத்தத்தில், ஹர்தோய் நகருக்கு வருகை தந்தார். அப்போது அழகான பாதாள வீடு கட்ட வேண்டும் என பப்பு பாபாவுக்கு எண்ணம் வந்துள்ளது. இதையடுத்து தனிநபராக மண்வெட்டியைக் கொண்டு வீடு கட்டத் தொடங்கினார். இது மிகச் சிரமமான பணி என அறிந்திருந்தாலும் ஒருபோதும் பப்பு பாபா பின்வாங்கவில்லை.

தற்போது அந்தப் பாதாள வீட்டில் காற்றோட்ட வசதியுடன் 11 அறைகள், வழிபாடு நடந்த தனி இடம், ஓவிய அறை, கீழே இறங்கி வருவதற்கான படிக்கட்டுகள் அனைத்தையும் உருவாக்கி இருக்கிறார்.

மேலும் உணவுப் பொருட்களைச் சேமிக்க கிடங்கு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார். ஒவ்வொரு அறையிலும் பல்வேறு கலைச் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதை கட்டுவதற்கு ஏறக்குறைய 11 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட பப்பு பாபா, தினந்தோறும் காலை நேரத்தில் பாதாள வீட்டிற்கு வருகை தந்து, அதனை மேலும் மெருகேற்றி வருகிறார். இரவு உணவுக்காக மட்டுமே வீட்டிற்குச் செல்கிறார். வியப்பூட்டும் வகையில் இந்த பாதாள வீடு இருந்தாலும், பப்பு பாபாவிற்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால், அடுத்து செய்யலாம் என தீவிரமாக யோசித்து வருகிறார்.