உத்தரப் பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் திபய் என்ற ஊரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 508 கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதில் 13 கழிப்பறைகளில் தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் தமிழக அரசின் கோபுரம் சின்னங்கள் கொண்ட டைல்ஸ்கள் பதிக்கப்பட்டிருந்தன. இத்தகவலை கிராமத்தில் உள்ள சிலர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட டைல்ஸ்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
மேலும் சம்மந்தப்பட்ட பகுதியின் வளர்ச்சி அதிகாரி சந்தோஷ் குமார் என்பவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன் வளர்ச்சி அதிகாரி சந்தோஷ் குமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் சின்னம் கொண்ட டைல்ஸ்கள் உத்தரப் பிரதேசம் வரை சென்றது எப்படி எனக் கேள்வி எழும்பியுள்ளது. மேலும் இவ்வாறு எப்படி நடந்தது என்றும் இரு மாநில அரசுகளும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.