இந்தியா

''நாம் செயல்படவேண்டிய நேரம் இது'' - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

jagadeesh

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக வாரிய கூட்டத்தில் கொரோனா நிலவரம் குறித்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ''தற்போது நாம் செயல்பட வேண்டிய நேரம்'' எனக் குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் 149-வது நிர்வாக வாரிய கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைப்பெற்றது. இந்த நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இருந்து வந்தார். அவரது பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் ஹர்ஷ் வர்தன் பேசியது:

"தற்போது நான் மகிழ்ச்சியும், கவலையும் கலந்த மனநிலையில் உள்ளேன். ஒருபுறம், இந்த மதிப்புமிக்க இயக்கத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. மறுபுறம், கொரோனா நெருக்கடியில் நிறைய பணிகள் செய்ய வேண்டிய நிலையில் நான் வெளியேறுவது வருத்தம் அளிக்கிறது.

கொரோனா பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான உபகரணங்களை பெறும் பணி வேகமாகவும், மிகவும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். யாரும் விடுபடக் கூடாது.

கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உலகளவில் சம அளவில் கிடைப்பதை உலக சுகாதார நிறுவனம் ஆதரிப்பது என்னை ஈர்த்துள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கையில், உலகளாவிய ஒத்துழைப்பு அடிப்படையானது. இது தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்.

நாம் தற்போது செயல்பட வேண்டிய நேரம் இது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு, பல அவசர சுகாதார சவால்கள் ஏற்படப்போகின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. இந்த அனைத்து சவால்களுக்கும், பகிரப்பட்ட நடவடிக்கை தேவை. ஏனென்றால், இவை பகிரப்பட்ட அச்சுறுத்தல்கள். இதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

உலகம் ஒரு குடும்பம் என்பதுதான் இந்திய தத்துவம். ஆகையால், நாம் உலக சமுதாயத்துடன் இணைந்து திறம்பட பணியாற்றி, நமது பொது சுகாதார கடமைகளை செய்ய வேண்டும். இந்த அடிப்படை நம்பிக்கைதான், நமது வழிகாட்டுதல் விதிமுறையாக இருக்க வேண்டும். எங்களை பொருத்தவரை, சுகாதாரத்துக்கான தடுப்பூசிகள் வசதியான மற்றும் வசதியற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் நீண்ட நேரம் மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவமனைகளிலும், விடுதிகளிலும் அவர்கள் தங்குகின்றனர். புதிய தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்க விஞ்ஞானிகள் கூடுதல் நேரம் பணியாற்றுகின்றனர்.

ஊடகங்களில் வலம் வரும் பொய்த் தகவல்களுக்கு பதில் அளிப்பதில் உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள நீங்கள் அனைவரும் பணியாற்றுகிறீர்கள். நமது நோயாளிகளின் ஒத்திபோடப்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள, மருத்துவர்கள் தங்கள் இயல்பான பணிக்கு திரும்புகின்றனர். இதற்கு மத்தியில், லட்சக்கணக்கான சுகாதார பணியாளர்களையும் மற்றும் முன்கள பணியாளர்களையும் நாம் இழந்துள்ளோம்" என்று ஹர்ஷ் வர்தன் பேசினார்.

நிர்வாக வாரிய தலைவர் பதவியில் இருந்து விடைபெறும் ஹர்ஷ் வர்தனுக்கு, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ராஸ் வாழ்த்து தெரிவித்தார். உலக சுகாதார நிறுவன நிர்வாக வாரியத்தின் புதிய தலைவராக கென்யாவின் டாக்டர் பேட்ரிக் அமோத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.