இந்தியா

'திருடினா எர்ணாகுளம் வடக்குப்பகுதிதான்' - ஒரே பகுதியில் திருடும் சென்டிமென்ட் திருடன்!

webteam

எர்ணாகுளம் வடக்குபகுதியை மட்டுமே குறி வைத்து திருடும் ஒரு திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு இடம் மனதோடு ஒன்றியதாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சுற்றுலாதலம், பூங்காங்கள், கடற்கரை என ஏதோ ஒரு இடமாக அது இருக்கலாம். ஆனால் திருடர் ஒருவருக்கு பிடித்த இடம் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? கேரளாவைச் சேர்ந்த மரியர் போத்தம் என்ற திருடனுக்கு பிடித்த இடம் எர்ணாகுளம் வடக்குப்பகுதிதானாம்.

அவர் திருட்டில் ஈடுபட்டாலே அந்தப்பகுதிதான். பலமுறை திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கும் மரியர் போத்தம் சிறைச்சாலைக்கு போவார். மீண்டும் வந்து அதே பகுதியில் திருடி போலீசாரிடம் சிக்கிக்கொள்வார். 6 மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்துள்ளார் மரியர் போத்தம். தற்போது மீண்டும் எர்ணாகுளம் வடக்குப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். மரியர் போத்தமை கைது செய்தால்தான் தங்களுக்கு தூக்கம் என புலம்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

மரியான் பூதம் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய வரம்பில் உள்ள வீடுகளிலிருந்து மட்டுமே ஏன் திருடுகிறார் என்பது குறித்து ஏராளமான கதைகள் சுற்றுகின்றன, பிரபலமான கதை ஒன்று என்னவென்றால், அந்த நிலையத்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு எதிரான வெறுப்பே என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் இது குறித்து பேசிய எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீசார் ஒருவர், ''அவர் எர்ணாகுளம் வடக்குப்பகுதி முழுவதும் திருட்டில் ஈடுபடுவதில்லை. குறிப்பாக எஸ் ஆர் எம் சாலை, லிசி மருத்துவமனை பகுதி, கோலத் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தான் திருடுகிறார். காரணம் என்னவென்றால், அந்த இடங்கள் அவருக்கு மிக மிக பரிச்சயமான இடங்கள். 50 வருடங்களாக அப்பகுதியில் வசித்துள்ளார். அப்பகுதியின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் அவருக்கு தெரியும். என்றார். மேலும், மரியர் கொச்சிக்கு சிறிய வயதில் வந்துள்ளார். மேற்கண்ட பகுதிகளில்தான் குப்பைகள் பொருக்கி வாழ்ந்துள்ளார். அதனால் இந்த இடங்கள் அவருக்கு அத்துப்படி'' என்கிறார்

மேலும் திருடர் குறித்து பேசிய போலீசார், வீடுகளுக்குள் புகுந்து தங்கநகைகளை திருடுவார் மரியர். பல வீடுகளுக்குள் புகுந்து திருடினாலும் வீட்டுக்குள் புகுந்து யாரையும் தாக்கியதில்லை. ஓவ்வொரு முறை திருடி முடித்தபோதும் அவர் தனது மனைவிக்கு மிஸ்டு கால் கொடுப்பார். மிஸ்டுகால் வரவில்லை என்றால் அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பதை அவரது மனைவி தெரிந்துகொள்வார். தற்போது எர்ணாகுளம் வடக்குப்பகுதியில் திருட்டு அதிகரித்துள்ள நிலையில் போலீசார் மரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source: Thenewsminute