லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்தும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதுபோன்ற சூழலில், உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹியா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 16ஆவது வழக்காக இன்றைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.