இந்தியா

ரத்தாகிறது சிலிண்டருக்கான மானியம் - விலையும் உயர்கிறது!

webteam

சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

நாடு முழுவதும், 18.11 கோடி பேர் மானிய விலையில் காஸ் சிலிண்டர் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 14.5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் ரூ.424.07 என்ற மானிய விலையில் அளிக்கப்படுகிறது. இதன்படி ஆண்டுதோறும் மானிய விலையில், 12 சிலிண்டர்களை பெற முடியும். அதன் பிறகு சந்தை விலையில் சிலிண்டர்களை பெறலாம் என்ற விதியும் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், "பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் விலையில் வாட் வரி சேர்க்காமல், சிலிண்டருக்கு இரண்டு ரூபாய் மாதம் தோறும் உயர்த்த கடந்த ஆண்டு ஜூலை1ம் தேதி முதல் உயர்த்த உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு 10 முறை காஸ் விலையை நிறுவனங்கள் உயர்த்தின."

"கடந்த மே 30ம் தேதி பிறப்பித்த மத்திய அரசின் உத்தரவின் மூலம், மத்திய அரசு அளித்து வரும் மானிய தொகை முழுவதுமாக நீக்கும் வரை மாதம் தோறும் சிலிண்டர் விலையில், நான்கு ரூபாய் உயர்த்தி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்த முறை அமலில் இருக்கும். அதன் பிறகு சிலிண்டருக்கான மானியம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்காக, அடுத்த ஆண்டு மார்ச் வரை, மாதம் தோறும் ஒரு சிலிண்டருக்கு நான்கு ரூபாய் வீதம் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.