இந்தியா

ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் குலுங்கியபோது எடுக்கப்பட்ட பரபரப்பு வீடியோ வெளியானது!

ச. முத்துகிருஷ்ணன்

மும்பையில் இருந்து மேற்கு வங்கத்துக்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் திடீரென குலுங்கும்போது எடுக்கப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியானது.

மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகருக்கு நேற்று இரவு 'ஸ்பைஸ் ஜெட் போயிங் 737' விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. துர்காபூர் அருகே வந்ததும் விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதனை 'ஏர் - டர்பியுலன்ஸ்' என்பார்கள்.

இதையும் படிக்க: 'டர்பியுலன்ஸ்' (Turbulence) என்றால் என்ன?

தரையிறங்க வேண்டிய விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர். விமானம் குலுங்கியதில் சில பயணிகள் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். இச்சம்பவத்தில் 12 பயணிகள் மற்றும் 3 விமானப் பணியாளர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் சிறிது நேரத்திலேயே விமானம் துர்காபூரில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து, காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

விமானம் குலுங்கும் போது உள்ளிருந்த பயணிகளின் கேமராவில் எடுக்கப்பட்ட பரபரப்புக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பயணிகளின் உடைமைகள் விமானத்தில் சிதறிக் கிடப்பது அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒழுங்குமுறை விசாரணைக்காக குழுக்களை நியமிப்பதாக பொதுமக்கள் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) அறிவித்துள்ளது. விமான பாதுகாப்பு இயக்குநர் எச்.என். மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.