இந்தியா

அசாம்: அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு

webteam

அசாமில் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 70 ஆக உயர்த்தப்பட உள்ளது.

வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் மருத்துவத்துறையில் பேராசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக விவாதித்த அம்மாநில அமைச்சரவை, அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65லிருந்து 70ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை தக்க வைக்கும் நோக்கத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அசாம் அரசு விளக்கமளித்துள்ளது.

“அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு விகிதாசாரமாக இல்லை. இது இப்போது 7 ஆக உள்ளது. இதனால் பற்றாக்குறையை ஈடுசெய்ய மருத்துவர்களின் ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டுள்ளது," என்று அசாம் தகவல் அமைச்சரும் அரசாங்க செய்தித் தொடர்பாளருமான பிஜூஷ் ஹசாரிகா தெரிவித்தார்.

இதுதவிர தேயிலை தோட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில், 'இலவச மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள்' திட்டத்தை செயல்படுத்த, அம்மாநில அரசு ரூ.136.8 கோடியை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு சுகாதார நிலையங்களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், கிருமிநாசினிகள், இரசாயனங்கள் மற்றும் நுகர்பொருட்கள் தடையின்றி கிடைப்பதை இது உறுதி செய்யும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.