காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை தொடர வாய்ப்புள்ளதால் அணைகளில் இருந்து அதிகளவு நீர் ஆற்றில் திறந்து விடப்படக் கூடும் என்று கர்நாடக மாநில வருவாய்த்துறை முதன்மைச் செயலர் கங்காராம் பதேரியா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில வருவாய்த்துறை முதன்மைச் செயலர் கங்காராம் பதேரியா வெளியிட்ட அறிக்கையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு கன மழை தொடர வாய்ப்புள்ளதால் அணைகளில் இருந்து அதிகளவு நீர் ஆற்றில் திறந்து விடப்படக் கூடும் என தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையை கண்காணித்து அதற்கேற்றபடி உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார். அபாயகரமான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்புத்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கங்காராம் பதேரியா கூறியுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் இரண்டு குழுக்கள் பெங்களூரு மற்றும் மங்களூருவில் தயாராக இருப்பதாகவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேவையான படகுகள், நீச்சல் வீரர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர தேவையான மருத்துவ வசதிகள் ஆகியவற்றுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். தகவல் தொடர்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றும் கர்நாடக மாநில வருவாய்த்துறை செயலர் கங்காராம் பதேரியா தெரிவித்துள்ளார்.