இந்தியா

உ.பி. பனாரஸ் மருத்துவமனையில் விதிமீறல்: 3 நாட்களில் 14 பேர் பலி

webteam

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின்போது, நோயாளிகளுக்கு தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் வாயுவை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின், சுந்தர் லால் மருத்துவமனையில் ஜூன் 6 முதல் 8 ஆம் தேதிவரை நடைபெற்ற அறுவை சிகிச்சைகளில் 14 பேர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்ட விசாரணையில், மருத்துவத்திற்கு அனுமதி அளிக்கப்படாத வாயுவை, அறுவை சிகிச்சையின்போது, நோயாளிகளை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நைட்ரஸ் ஆக்சைடு, மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.