இந்தியா

பட்ஜெட் அறிக்கையின் நகல்கள் தீவிர பரிசோதனை

பட்ஜெட் அறிக்கையின் நகல்கள் தீவிர பரிசோதனை

webteam

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையின் நகல்கள் மோப்ப நாய்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணியளவில் அவர் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஆண்டு மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தாக்கல் செய்யப்பட உள்ள இரண்டாவது பட்ஜெட் இதுதான். முந்தைய பாஜக அரசில் ராணுவ அமைச்சராக இருந்து, இந்த முறை நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட்டும் இதுவே ஆகும்.

புதிய பட்ஜெட்டில், நாட்டில் பொருளாதார மந்தநிலையை சீர்செய்வதற்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் தனிநபர்களுக்கான வரிச்சலுகைகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்குவதற்காக அச்சிடப்பட்ட பட்ஜெட் அறிக்கை நகல்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக பாதுகாப்பு சோதனையின் ஒரு பகுதியாக மத்திய பட்ஜெட்டின் அச்சிடப்பட்ட பிரதிகள் மோப்ப நாய் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திற்கு உள்ளே கொண்டு செல்வதற்கு முன்பு பாதுகாப்பு படையினர் இந்தச் சோதனையை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.