இந்தியா

“நவராத்திரி பண்டிகையின்போது பெண்களின் வலிமையை போற்றுவோம்” - பிரதமர் மோடி

“நவராத்திரி பண்டிகையின்போது பெண்களின் வலிமையை போற்றுவோம்” - பிரதமர் மோடி

webteam

இந்தியாவின் லட்சுமிகளாக பெண் குழந்தைகளை போற்றி கொண்டாட வேண்டுமென நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஐநா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிய பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் உரையாற்றினார். அதில், 90ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, பெண் குழந்தைகளை நாட்டின் லட்சுமிகளாக கொண்டாட புதிய முயற்சியை தொடங்க அழைப்பு விடுத்தார். 

பெண்களின் ஆற்றலை, வலிமையை நவராத்திரி பண்டிகை காலங்களில் போற்றுவோம் என்றார். தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு அனுபவங்களை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இ-சிகரெட் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதை மக்கள் உணவரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி இது குறித்த விழிப்புணர்வு நாட்டு மக்களுக்குத் தேவை என்றார். 

தேசப் பிதா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழாவின் போது நெகிழி உபயோகத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது பட்டாசுகளால் யாருக்கும் எந்த இன்னலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், நாட்டு மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.