இந்தியா

புதுச்சேரி: ரேசன் அரிசியை தெருவில் கொட்டி மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

புதுச்சேரி: ரேசன் அரிசியை தெருவில் கொட்டி மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

PT

புதுச்சேரியில் ரேசன் அரிசியை கொட்டி மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டாலும், இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் சரிவர நடக்கவில்லை எனவும் அரசிடம் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும் புதுச்சேரியில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.அந்த வகையில் அரசால் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக கூறி அகில இந்திய மக்கள் கழகத்தினர் புதுச்சேரி சிவாஜி சிலை அருகே, அரசு அளித்த இலவச அரிசியை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாஸ்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.