இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

JustinDurai

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆரோக்கியமான முறையில் விவாதம் நடத்த அரசு தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 33 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இக்கூட்டத் தொடரில் அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆரோக்கியமான, அர்த்தமுள்ள விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

19 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் 30-க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரம் எரிபொருள் விலை உயர்வு, சீனா உடனான எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையில் மக்களவை கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்றது.