இந்தியா

"வருண் சிங் போராளி. வெற்றியுடன் மீண்டு வருவார்" - அவரது தந்தை கே.பி.சிங் நம்பிக்கை

EllusamyKarthik

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் நிச்சயம் போராடி மீண்டு வருவார் என அவரது தந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளார். குன்னூர் அருகே கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்த நிலையில், விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

முதலில் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறப்பு சிகிச்சைக்காக அவர் பெங்களுரு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போபாலில் உள்ள வருண் சிங்கின் தந்தையும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான கர்னல் கே.பி.சிங் அளித்த பேட்டியில், தனது மகன் வருணின் உடல்நிலை ஒவ்வொரு மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில், ஏற்றத்தாழ்வுகள் தெரிந்தாலும் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கடுமையான போராளியான தனது மகன், இந்த போராட்டத்திலும் வென்று வருவார் என்று கர்னல் கே.பி.சிங் தெரிவித்தார். வருண் சிங் விபத்தை சந்திப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு தேஜஸ் போர் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறால் நடுவானில் விபத்துக்குள்ளான போது, அதனை தவிர்த்ததற்காக கேப்டன் வருண் சிங்கிற்கு, சௌர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.